Sunday, June 23, 2019

துர்கா மாதா - எனது பார்வையில்.



நோக்கும் போக்கும்

புது சிந்தனை புகட்டி புத்துணர்ச்சி புத்துணர்வு ஆகியவற்றை  புகுத்தி மனிதன் மனிதனாக மலர்வதற்கு வழி வகுக்கும் மகோன்னத இலக்கிய வடிவம் புதினம். மேகம், கடல் நீரில் இருந்து உருவாகிறது. உயரே கிளம்பி வானத்தில் வட்டமிட்டு கடலிலும் மற்ற நில பரப்பிலும் மழை பொழிந்து பயன்படுகிறது. அவ்வாறே புதினம் கூட சமூகத்தில் இருந்து உருவாகி சமூகத்திற்கே பயன் அளிக்கிறது. மனித இயல்பும் மனித வாழ்வும் தன்னகத்தே கொண்டுள்ளதால் மனித மனங்களையும் சில சமயங்களில் இதயங்களையும் தொடுகிறது. எனவே புதினத்திற்கு வாசகர்கள் இடையே  மிகுந்த வரவேற்பு.

காலம் செய்த கோலமடி – விமர்சனம்.



நாவல் எனும் ஆங்கிலச் சொல்லிற்கு மாற்றாகப் புதினம் எனும் தமிழ்ச் சொல் வழங்கப்படுகிறது. இவ்விரு சொற்களுக்கும் புதுமை கொண்ட இலக்கிய வடிவம் எனும் பொருள் கொள்ளலாம். தமிழ் இலக்கிய உலகிற்கு புதினம் புதிதில்லை என்றாலும் அவ்வப்போது அதில் இடம் பெறும் புதுமைகள் மட்டும் புதியன. இத்தகையவற்றுள் காலம் செய்த கோலமடி புதினம் பல புதுமைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

Friday, June 21, 2019

பிள்ளை வந்துவிட்டான்.



ராமநாதனுக்கு ஒரே வருத்தம். ஊர்ப் பிள்ளைகள் எல்லாம் ஒழுங்காகப் படித்து ஏதோ ஒரு வேலையில் சேர்ந்துவிட்டனர். தன் பிள்ளை மட்டும் உதவாக்கரையாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு படிப்பு ஏறவில்லை என்பதைவிட படிக்க இஷ்டமில்லை என்பதுதான் உண்மை. அவன் கணக்குப்படி உழைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள்தான். படிச்சு படிச்சு என்னதான்  கிழிக்கப் போறாங்க? எதுக்கு அந்த மாதிரி செய்யணும்? வீட்டில் ஏராளமான சொத்து கொட்டி  கிடக்கு.  இதை விடவா சம்பாதிக்கணும்? இதுதான் அவனது எண்ண  ஓட்டம்.
எப்போதும் டீ.வி பார்த்துக்கொண்டிருப்பான். அது இல்லை என்றால் கைபேசி இருக்கவே இருக்கு. இன்டர்நெட்டில் பார்ப்பதற்கு ஏராளம் ஏராளம். கூப்பிட்ட குரலுக்கு பதில் சொல்வது கிடையாது. வேளைக்கு சாப்பாட்டுக்குப் போறது கூட சந்தேகந்தான். ஒரே பிள்ளை. அதுவும் செல்லப் பிள்ளை. அதனால்தானோ என்னவோ அம்மாக்காரிக்கு அவன் மேல் தனிப்பற்று. சின்ன ஈயோ எறும்போ கூட அவன் மேல் படக்கூடாது. அவனை யார் குற்றம் சொன்னாலும் அவளுக்கு வர்ர கோவம் பார்க்கணுமே... இந்த அணுகுமுறை சரியில்லை என்று ராமநாதன் பல முறை பக்குவமாக அவளுக்கு எடுத்துச் சொன்னான். ஆனால் அதுவெல்லாம் அவள் காதில் ஏறவே இல்லை. மாறாக கணவனைக் கடிந்து கொள்வதும், எடுத்தெறிந்து பேசுவதுமாக காலத்தை ஓட்டினாள். இந்த லட்சணத்தில் பையனுக்கு அப்பாக்காரன் மேல் பற்றோ பாசமோ கௌரவமோ எப்படி ஏற்படும்? மேலும் அப்பா சொல்வதற்கெல்லாம் நேர்மாறாக நடக்கத் தொடங்கிவிட்டான். ராமநாதனுக்கு வருந்துவதைத் தவிர வேறு வழி ஒன்றும் புலப்படவில்லை. 
ராமநாதன் குழந்தையாய் இருக்கும் போதே அன்னை இறந்துவிட்டாள். அப்பனே அம்மையப்பனாகி அவனை வளர்த்து ஆளாக்கினான். உறவினர் வந்து தொந்தரவு கொடுத்தாலும் மறு மனைவிக்கு அவர் மனதில் சற்றும் இடம் கொடுக்கவில்லை. பாசம் முழுவதும் பையன் மேல் வைத்தான். ராமநாதனும் சிறுகச் சிறுக வளர்ந்து அப்பனுக்கு உதவும் அளவிற்கு ஆளாகிவிட்டான். படிப்பு சரியாக ஏறாவிட்டாலும் செல்வம் சேர்க்கும் கல்வி எப்படியோ அவனிடம் தஞ்சம் புகுந்துவிட்டது. அப்பன் விட்டுச் சென்ற ஐந்து ஏக்கர் நிலத்தை ஓயா உழைப்பும் விடாப்பிடியுமாக இருபத்தைந்து  ஏக்கர் ஆக்கிவிட்டான். அம்மா இல்லாத குறையை உணர்ந்தவரானதால் தங்கள் கிராமத்திலேயே அம்மா இல்லாக் குழந்தை அலிமேலுவை அறரவணைத்துத் திருமணம் செய்து கொண்டான். ஏழை வீட்டிலிருந்து வந்த அலிமேலுவும் கணவனைக் கண்ணாக கருதி மு்தலில்  காலத்தை கழித்து வந்தாள்.
ஆண்டுகள் நகர்ந்தாலும் பிள்ளைகள் இல்லாக் குறை ராமநாதனையும் அலிமேலுவையும் வாட்டத்தான் செய்தது. போதாக்குறைக்கு அக்கம் பக்கத்தாரின் அங்கலாய்ப்பு கூட அவர்களை உறுத்தத் தொடங்கியது. யாரோ சொன்னதைக் கேட்டு கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் சோலிங்கருக்குக் கூட போய் வந்தார்கள். சொன்ன டாக்டரை எல்லாம் பார்த்தார்கள். எது எப்படியானாலும் எப்படியோ ஒரு ஆண் மகவு அவர்களுக்குப் பிறந்தது. அன்னை தந்தையர் இருவருக்கும் மகிழ்ச்சியே என்றாலும்  அம்மாக்காரியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பையனை செல்லம் கொடுத்து வளர்த்தாள். அவன் சொன்னதுதான் அவளுக்கு வேதம். அம்மாவும் மகனுமாக; கஷ்டப்பட்டு சம்பாதித்த காசைக் கரைக்க ஆரம்பித்துவிட்டனர். ராமநாதனுக்கு வருத்தம் தாங்கவில்லை. மனைவியைத் திட்டினார். மகனை அடித்தார். ஆயினும் பயனில்லை.
பகலெல்லாம் உழைத்த களைப்பில் வீட்டுக்குப் போயாக வேண்டுமே என்று பகலவன் படிப்படியாக இறங்கிக் கொண்டிருந்தான். வயல்களில் பொன்னிறம். நெற்கதிர்களில் பொன். கண் கொள்ளாக் காட்சி. ராமநாதன் ரசித்தவாறே நடந்தான். மாந்தோப்பில் அடி வைத்தவன் நகர முடியாமல் அப்படியே கல்தூண் போல்  நின்றுவிட்டான். வைத்த கண் வாங்காமல் மீண்டும் மீண்டும்  பார்த்தான். நம்புவதா வேண்டாமா என்று சிந்தித்து கூட பார்த்தாகிவிட்டது. வேறு வழி இல்லை. நம்பித்தான் ஆக வேண்டும். பார்த்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தோப்புக்கிடையே மாமரத்தின் கீழ் நாலைந்து பிள்ளைகள் குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன.  அவர்களுக்குத் தலமை தன் பிள்ளைதான். செய்வதறியாது ப்ரம்மை பிடித்தவர்போல் ராமநாதன் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றுவிட்டான். பையனை அதட்டினால் தன் பெருந்தன்மைக்கு களங்கம் வந்துவிடுமே. வந்த வழியே திரும்பிவிட்டான். அங்கே குடித்துக் கொண்டிருந்தவர்களுக்கோ ராமநாதன் வந்தது பற்றியோ,  திரும்பிப் போனது பற்றியோ எதுவுமே தெரியவில்லை.
பிள்ளை சாமிநாதனுக்கு வாலிபம் வந்துவிட்டது. கூடா நட்பும் கூடத் தொடங்கியது. படிப்பு மண்டையில் ஏறாதது மட்டுமன்றி சிறந்த பண்பாடும் ஒட்டவில்லை. அம்மாவைக் கேட்டு  காசை வாங்கி வந்துவிடுவான்.  பையன்மேல் அளவற்ற பாசம் கொண்ட அம்மாக்காரி கூட அளவிற்கு அப்பார்பட்டே காசை வாரி வழங்கி வந்தாள்.  அது எப்படி எல்லாம் செலவாகிக் கொண்டிருக்கிறது என்பதை எல்லாம் அவள் கண்டு கொள்வதே இல்லை. அதன் விளைவாக சாமிநாதன் ஒரு குட்டிப் படையைச் சேர்த்துக் கொண்டான். குடித்துக் கும்மாளம் போடும் நிலை தாண்டி குட்டிகளை வேட்டையாடும் நிலைக்கு உயர்ந்துவிட்டான். எங்கு கேட்டாலும் சாமிநாதனின் திருவிளையாடல்கள்தான்  ராமநாதன் காதுக்கு எட்டிக் கொண்டிருந்தன. புழுவாகத் துடித்துப்போய்விட்டார். அழாக்குறையாக மனைவி அலிமேலுக்கும் சொன்னார். அவள் காதில் போட்டுக் கொண்டதாகக்கூடத் தெரியவில்லை. மா்றாக, ‘உங்களுக்கென்ன தெரியும்? பத்தாம்பசலி ஆசாமி. பழைய பஞ்சாங்கம். நாட்ல நாகரீகம் எப்புடி எல்லாம் போகுது? அது கூடத் தெரியல உங்களுக்கு. இப்புடி எல்லாம் அவன கரிச்சு கொட்றத விட்டுபுட்டு அவனுக்கு கல்யாணம் காட்சின்னு எதாவது நல்லது செய்றத பாருங்க. அப்பறம் அவன் வழிக்கு வர்ரானா இல்லையானு பாருங்க’ என்று சற்று அதட்டலாகவே கணவனைக் கடிந்து கொண்டாள். ராமநாதனுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மனைவி சொன்னதைப் பற்றி பல நாட்கள் சிந்தித்தும் பார்த்தாகிவிட்டது. கால்கட்டு போடுவதை விட அப்போதைக்கு மாற்று வழி ஏதும் அவருக்குப் புலப்படவில்லை.
இரவு சாப்பாடு மு்டிந்துவிட்டது. வெற்றிலைப்பாக்கும் மென்று தின்றாகிவிட்டது. அப்போதுதான் ராமநாதனுக்கு நினைவிற்கு வந்தது. தான் காலையிலிருந்து ஒரு பீடி கூட பற்ற வைத்துக் கொள்ளவில்லை என்று. செய்யாத தப்பைச் செய்துவிட்டது போல் துடித்துப் போய்விட்டார். பாம்பின்  மேல்  கால் வைத்தது போல் பதறிப்போய்விட்டார். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் உள்ளே போனார். பற்ற வைத்த பீடியோடு திரும்பி வந்தார்.  மறுபடியும் திண்ணை மேல் உட்கார்ந்தார். பீடியை ரசித்துக் கொண்டிருந்தார். ‘ ராமநாதா  யோவ்  ராமநாதா! பாவி மனுஷா! என்னதான் பண்ணித் தொலைக்கற’ குரல் வந்த திசையில் திரும்பினார் ராமநாதன். பாலிய நண்பன் சந்தானம்தான் அது. ‘அடெடே சந்தானமா? வாப்பா வா! ரொம்ப நாளாச்சு பாத்து. ஊர்ல இருந்து எப்போ வந்த? மாமியார் வீட்லையே குடியேறிய மகராஜன். உனக்கென்ன. நான் பட்ர பாடப் பாரு. அது சரி உங்க ஊர்ல எங்க பையனுக்கு பொண்ணு எதாவது பாத்து வைக்கக் கூடாதா?’ கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாதென்று நினைத்தாரோ என்னவோ. உற்ற நண்பனிடம் உள்ளதெல்லாம் கொட்டிவிட்டு உதவி எதிர்பார்த்தார். ‘ராமநாதா நான் கூட அதத்தான் சொல்ல வரேயா. அந்த ஊர்ல ஒரு பொண்ணு இருக்கா. மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கா. சொத்தும் பத்தும் கொறச்சலே கி்டையாது. அஞ்சாறு  தலைமுறைக்குக் காணும். அந்த பொண்ண   உங்க பையனுக்குக் கட்டி வெச்சேன்னா அவன் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருக்காது.  ஆனா ரெண்டு சிக்கல் இருக்கு. அதுகூட சொல்லிடணும் இல்லியா? அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு. பையன் குடும்ப உறவுக்கு லாயக்கில்லியாம். போடாப்போன்னுட்டு அவன் கட்ன தாலிய அவன் மூஞ்சி மேலையே வீசி எறிஞ்சிட்டு வந்துட்டா. அடுத்த சிக்கல் என்னாடான்னா, ஒரே பொண்ணுன்றதுனால பொண்ணுக்கு அம்மா அப்பா மாப்பிளை வீட்டோடையே வந்துட்ணும்னு விரும்புறாங்க. ராமநாதா நான் எதுவும் மறைக்கல. அத்தனையும் சொல்லிபுட்டேன். ஆமா. நீ இன்னிக்கு இல்ல, ரெண்டு மூணு நாள் கூட டைம் எடுத்துக்கோ. பொண்டாட்டியையும் பிள்ளையையும் வெச்சுகினு ஆலோசன பண்ணிக்கோங்கோ. நல்ல முடிவுக்கு வாங்க. அப்பறமா யார்கிட்டையாவது சொல்லி அனுப்பு. தேவப்பட்டா வந்து பேசறேன். சரி பீடி எதாவது எக்ஸ்டா இருக்குதா?’ சந்தானம் பேச்சை மு்டித்தார் வந்த வேளை மு்டிந்ததாகவே கருதி. ராமநாதன்  அவருக்கொரு பீடி கொடுத்தார். நண்பர்கள் இருவரும் கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு பிரிந்தனர்.   
ராமநாதன் தீர்க்கமாகச் சிந்தித்தார். நல்லதையும் கெட்டதையும் ஆராய்ந்து பார்த்தார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டார். மனைவிக்குப் புரியும்படியாகச் சொன்னார். அலிமேலுவுக்கு அரைகுறை மனசுத்தான். ஒரு முடிவிற்கும் வர முடியாத நிலை. கண் பாவை போல் இருக்க வேண்டிய பையன் கண் காணாத எடத்துக்குப் போய்ட்டா எப்படி? போகாமப் போனா அவ்வளவு துட்டு வருமா என்ன? அவுருக்கே உட்டுட்லாம். என்ன செய்றாரோ செய்ட்டும். இதுதான் அலிமேலுவின் சிந்தனை ஓட்டம். ராமநாதன் சாமிநாதனைக் கூப்பிட்டு விசயத்தை அவன் காதிலும் போட்டு வைத்தான். அடேயப்பா, சாமிநாதனுக்குத்தான் எத்தனை குஷி? மகிழ்ச்சி பிடிபடவே இல்லை. மருமகளை மாட்டுப்பெண் என்று சொல்வதின் அர்த்தம் அவனுக்கு அப்போதே விளங்கிவிட்டது.     
மாடு என்ற சொல்லை செல்வம் என்ற பொருளில் வள்ளுவர் பயன்படுத்தி இருப்பது படிக்காத சாமிநாதனுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லைதான். செல்வத்தோடு வரும் மருமகளாதலால் அவளை செல்வ மகளாகவே அவன் கருதி இருக்க வேண்டும்.
சாமிநாதன் திருமணம் நல்லபடியாக நடந்தே்றிவிட்டது. மருமகன் அழகில் மகள் மட்டுமின்றி அவளது பெற்றோரும் மயங்கிவிட்டனர். பையன் வீட்டோடு வந்துவிடுவதால் ஆண்பிள்ளை இல்லாத குறை நீங்கிவிட்டதாகவே பெண்ணின் பெற்றோர்  திடப்படுத்திக் கொண்டனர். சாமிநாதன் கூட வந்த புதுசில் நல்லப் பிள்ளையாகவே நடந்துகொண்டான். மாமியார் மாமனாருக்கு மிகவும் அடக்கமாகவே இருந்தான். நாளடைவில்  அவனுக்கு செல்வந்தர்கள் நட்பு கிடைத்தது. அவர்களோடு ஊர்சுற்றவும் ஆரம்பித்துவிட்டான். குதிரைப் பந்தயம் போன்ற கேளிக்கைப் பந்தயங்களும் சாமிநாதனை நோக்கி படையெடுத்தன. வசமாக மாட்டிக் கொண்டுவிட்டான். செலவுக்குக் காசுக்கெங்கே போவான்? மாமியார் வீட்டில் கேட்டால் மதிப்பு குறைந்துவிடுமே? அப்போதுதான் அவனுக்கு அம்மா அப்பா நினைவு வந்தது. தாமதம் செய்யாமல் வீட்டுக்குப் போனான். பெற்றோர் மேல் பரிவு காட்டினான். பாசத்தைக் கொட்டித் தீர்த்தான். தான் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்வதாக ஒரு புழுகும் சொல்லி வைத்தான். அடுத்த வியாபாரத்தையும் ஆரம்பிக்கவிருப்பதாகச் சொன்னான். முதலுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும் என்றும் கூசாமல் சொன்னான். மாமியார் வீட்டில் கேட்பது மரியாதைக் குறைவென்று புத்திசா்லித்தனமாகப் பேசினான். பெற்றோரும் நம்பிவிட்டனர். கொஞ்சம் நிலத்தை விற்று பணம் கொடுத்தனுப்பினர். இவ்வாறாகவே ஒவ்வொரு முறையும் வந்து வியாபாரத்திற்கு  பணம் கேட்பது, முதல் போட்டவுடனே மொத்தமாக கோடிக்கணக்கில் வருமென்று உறுதி சொல்வது.... சாமிநாதன் விரித்த வலையில் பெற்றோர்கள் எழுந்திருக்க முடியாத வகையில் விழுந்தேவிட்டனர். ராமநாதன் சேர்த்து வைத்த சொத்து சாமிநாதனுக்கு  ஆரத்திக் கற்பூரமாகிவிட்டது.
வீட்டு முற்றத்தில் ஊரே கூடிவிட்டது. ஆளுக்கொருவாறு பேச முற்பட்டனர். ‘என்னயா செய்றது? இந்த ராமநாதன் செமையா ஏமாந்துட்டான். பையன நம்பி தான் சம்பாதிச்சதோட பெரியவங்க சம்பாதிச்சதையும் சேத்து  தொலச்சுட்டான். இப்ப என்ன பண்றது?’
‘அந்த ஆளச் சொல்லி புண்ணியம் என்ன?  எல்லாம் அந்த மகராசி குடுத்த செல்லம்தான்.  ரொம்ப நாள் கழிச்சு பொறந்தானில்லியோ? அதுனாலதானோ என்னவோ அந்தம்மா ரொம்ப செல்லம் குடுத்து வளத்துட்டா. பையனுக்குத் தலகால் புரியல. ரொம்ப கெட்டுப் போய்ட்டான். அப்பா அம்மா இருக்கறது கூட அவனுக்கு ஞாபகமில்ல. இப்ப என்னடான்னா அந்த ராமநாதனுக்கு ஒடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா கெடக்கான். ஆஸ்பத்திரிக்குப் போகனும்னா காசு வேணும். பாவம் அந்த மனுஷனாலதான் என்ன செய்ய முடியும்? கதியேனு கெ்டந்து இப்புடியே போய்ட வேண்டித்தான்’.   
கார் வரும் ஓசை கேட்டு  எல்லோர் கண்களும் அந்த திசையில் திரும்பின. கப்பலை நினைவூட்டும் கார் வந்து வீட்டு வாசலில் நின்றது. ‘பாத்தியா நான் அப்பவே நெனச்சேன். சொல்லி வெச்ச மாதிரி சாமிநாதன் டான்னு வந்துட்டான்.’  தன்னை ஒரு சிறந்த அறிவாளி என்று ப்ரகடனப்படுத்திக்கொள்ள விரும்பினாரோ என்னவோ ஒரு பெரியவர்  கத்துவது போலப் பேசினார். காரிலிருந்து நாகரீக உடையுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறங்கினர். அவர்களது சாமான்களை எல்லாம் வேளையாள் இறக்கிக் கொண்டுவந்து வீட்டிற்குள்ளே வைத்தார். அங்கே கூடி இருந்தவர்களுக்கெல்லாம் ஒரே திகைப்பு. யார் இவர்கள்? எல்லோர் வாயிலும் ஒரே விதமான முணுமுணுப்பு.
வந்த ஆசாமி சற்றும் சங்கோஜமில்லாமல் ராமநாதன் படுத்திருந்த கட்டிலை நெருங்கினார். ‘ஐயா ஐயா என்னா ஆச்சு? ஒடம்புக்கு என்ன செய்யுது? கொஞ்சம் கண்ணத் தெறந்து பாருங்க. நான் நாராயணன் வந்திருக்கேன்.  நந்திநி கூட வந்திருக்கா’. நாராயணன் சொன்ன வார்த்தைகள் ராமநாதன் அடி மனத்தை  தொட்டிருக்க வேண்டும். அல்ல அல்ல வருடி இருக்க வேண்டும். மெல்லக் கண் திறந்துப் பார்த்தார்.  ‘ அடே நாராயணா! நீ எப்புட்றா இங்க?...எனக்கு ஒன்னும் ஆகலடா. ஒடம்புக்கு என்னவோ செய்யுது. அதுகூட சொல்லத் தெரியல’.
‘எல்லாம் நான் கேள்விப்பட்டேன். பாத்துட்டுப் போலாம்னுதா வந்தேன். வந்த எடத்துல இப்புடிப்பட்ட கண்றாவி பாக்க வேண்டி வரும்னு கொஞ்சம் கூட எதிர் பாக்கல. எதானாலும் பரவால்ல, எவ்வளவு காசானாலும் பரவால்ல. என்ன? நான் உங்களக் காப்பாத்திக்கிறேன். கார் ரெடியா இருக்கு இப்பையே பட்ணத்துக்குப் போலாம் பொறப்படுங்க. டாக்டர் என்ன சொல்றாரோ அதையும் பாத்துப்புட்லாம்’.
நாராயணன் ராமநாதனைப் கைத்தாங்கலாகப் பிடித்து உடை மாற்றிக் கொள்ளச் செய்தார். அங்கிருந்தவர்களும் உதவினார்கள். எல்லோருமாச் சேர்ந்து ராமநாதனை தூக்காத குறையா காருக்கு அழைத்துச் சென்று பின் சீட்டில் படுக்க வைத்தார்கள். அலிமேலுவும் கண்ணீரும் கம்பலையுமாகக் கணவனைப் பின்தொடர்ந்தாள். கால்மாட்டில் இடம்பிடித்து ஒதுங்கிக் கொண்டான். நந்தினி நாராயணன் பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்தாள். நாராயணன் காரை ஓட்டத் தொடங்கினான். நந்தினியோடு பேச்சுக் கொடுத்தவாறே ராமநாதனின் அருமை பெருமைகளை அளவளாவிக்கொண்டே போனான். ராமநாதனுக்கு அரைகுறை நினைவு திரும்ப ஆரம்பித்தது. கண்கள் வியப்பால் அகல விரிந்து கொண்டன. சுற்றும் முற்றும் பார்த்தார். நாராயணனை மீண்டும் மீண்டும் உற்று நோக்கினார்.  பாசமும், பரிவும்  பரிமளித்தன. இதயம் கணத்தது. கண்களில் ஈரம். பழைய நினைவுகள் பழ நினைவுகளாக இனிக்கத் தொடங்கின.
ராமநாதன் தங்கள் ஊரில் ஒரு பெரிய நிலச்சுவாந்தார். பதினைந்து ஏக்கர் நிலத்திலும் நெல் போடுவார். அறுப்பு முடிந்த உடனே நெல்லைக் காய வைத்து சிலவானூரில் மிஷினுக்கு ஓட்டுவார். அரிசியை ஆலந்தூர் அரிசி மண்டிக்கு அனுப்பி விற்கச் செய்வார். ஓய்வு கிடைக்கும் போது சென்று பணம் வாங்கிக் கொண்டு வருவார். அப்படிப் போனவர்தான் அன்று அந்தப் பையனைப் பார்த்தார். பையன் பரிதாபமாக மண்டியின் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். கண்கள் எந்த நிமிசமும் பொழிந்து தள்ளத் தயாராக இருந்தன. ராமநாதன் முதலில் அந்தப் பையனைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போனார். போன வேலை முடிந்துவிட்டது. காசும் கைக்கு வந்துவிட்டது. களைப்பு களிப்பில் பறந்துவிட்டது. எதாவது ஒரு ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு பஸ் ஏற வேண்டியதுதான். விர் விர் என்று பீடு நடை போட்டார். வெளியே அந்தப் பையன் இருக்கிளானா என்று அவர் கண்கள் ஆராய்ந்தன. பையன் குத்துக்கல் போல் சற்றும் நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தான். ‘தம்பீ! யார் நீ? என்ன வேலையா வந்துருக்க? சோகமா வேற இருக்க? ஓங்கஷ்டத்த சொல்லு. என்னால முடிஞ்சது செய்றேன்’. ராமநாதன் சொற்கள் பையன் உள்ளத்தைப் பதம் பார்த்துவிட்டன. அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. தான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் எப்படியோ கஷ்டப்பட்டு பீ.ஈ. முடித்துவிட்டதாகவும் சொன்னான். மேற்படிப்புக்கு வெளி நாடு செல்லப் போறானாம். அரிசி அனுப்பிய அப்பங்காரன் மண்டியில போய் காசு வாங்கிகிட்டு வரச் சொன்னானாம். இப்பல்லாம் முடியாதுனு மண்டிக்காரன் கை விரிச்சுட்டானாம். செய்வதறியாத பிள்ளை சிந்தை குழம்ப அங்கேயே உட்கார்ந்திருக்கிறான்.
ராமநாதன் மனம் வெகுவாக இளகியது. படிக்காமல் ஊர் சுத்தும் தன் பையனை நினைத்துக் கொண்டார். இப்படிப்பட்டவங்களுக்கு உதவி செய்து உயர்த்தினா அவனும் பிழைப்பான் மத்தவங்களையும் பிழைக்க வைப்பான். ஊராரு பிள்ளையை  ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்னும் முதுமொழி முதுகைத் தட்டிக் கொடுத்தது. மறு எண்ணமில்லாமல் ராமநாதன் அந்தப் பையனை தன்னோடு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்ட பிறகு தேவையான காசையும் கொடுத்தனுப்பினார். அந்தப் பையன்தான் இந்த நாராயணன்.         
நாராயணன் அமேரிக்காவிற்குச் சென்று எம்எஸ் முடித்தான். வேலையிலும் சேர்ந்து கொண்டான். சம்பாத்தியம் அலுப்பு தட்டியது. தாய்த்திரு நாட்டுக்கே வந்துவிட நினைத்தான். சென்னையில் வீடும் வாங்கினான் தன் கிராமத்தில் நில புலன்களையும் வாங்கி சொத்து சேர்த்தான். அன்று தன்னை அமேரிக்காவிற்கு அனுப்பி ஆளாக்கிய புண்ணியவானைப் போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எப்படியோ விலாசம் கண்டுபி்டித்து வந்து சேர்ந்தான்.
நாராயணன் சொன்ன தகவல்கள் ராமநாதனுக்கு மிகவும் தெம்பூட்டின. எழுந்து உட்கார்ந்தார். நோய் நொடி எல்லாம் நொடியில் பறந்து போனதாக உணர்ந்தார். பெத்துப் போட்டவனெல்லாம்  பையன் கிடையாது. தக்க சமயத்தில் பரிவும் பாசமும் காட்டி உதவுபவன்தான் உத்தம புத்திரன். ராமநாதன் இதயம் முணுமுணுத்தது. ‘நாராயணா! ஆஸ்பத்திரிக்கு வேணாம், கார் வீட்டுக்குத் திருப்பு’. காரில் உள்ளோருக்கெல்லாம் வியப்பு மேலிட்டது. பேச்சு எழவில்லை. .....

முற்றும்.