Tuesday, June 4, 2019

தப்புவதெப்படி?



எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சிந்தனை கலைந்தேவிட்டது. பக்கத்தில் இல்லத்தரசி. எதிரில் நின்று எடக்குமடக்காகப் பேசும் இவள் பல் தெரிய பவ்வியமாக பக்கத்தில் நிற்பது புதிதாகவும் புதிராகவும் இருந்தது. எதாவது வேண்டுகோள் வைத்திருப்பாளோ? எதாவது வாங்கித் தரச்சொல்லி நச்சரிப்பாளோ? அப்படிக் கேட்டால் அதுக்கெல்லாம் நான் எங்கே போவது? பலவாறு எண்ணங்கள் வட்டமிட்டவாறே பயமுறுத்திக் கொண்டிருந்தன.

"என்னங்க! என்னங்க! உங்களத்தானே... படிப்பும் எழுத்தும் மாறி மாறிப் போய்ட்டிருந்தா நம் பொழப்பிலே மாரி வருமா?" தலை சொறிந்து கொண்டிருந்தாள் அவள். "நீயே வெண்ணிலா. நீ இருக்கும் போது நம் பொழப்பை இருளாவது நெருங்குவதாவது. இப்ப என்ன சொல்ற நீ?" 


"அது வந்து... வந்து... ஒண்ணுமில்லங்க, நம் தெருவிலே பொம்பளைங்க எல்லாரும் தேர்தல் காசு வாங்கப் போறாங்களாம். கட்சிக்காரங்க வந்து காசையும் இலவசப் புடவைகளையும் எல்லோருக்கும் குடுக்கப்போறாங்களாம். அதுதான் என்னக் கூட வரச் சொன்னாங்க. நம்ம வீட்ல 2 வோட்டு இருக்குதில்லையா? அது... சும்மா தண்டத்துக்கு போறது எதுக்கு? எதுக்கும் ஒரு வார்த்த உங்ககிட்ட சொல்லிட்டு வரேன்னேன்". வெண்ணிலா என் பதிலுக்காகவோ என்னவோ என் வாயைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஓட்டைப் பற்றியும் அதனுடைய பெறுமதிப்பைப் பற்றியும் மக்கள் சுதந்திரம் வந்த 73 ஆண்டுகளுக்குப் பிறகும்  கூட உணராம இருக்காங்களே. இதைவிட கொடுமை எதாவது இருக்குமா? மொத்தத்திலே இந்த ஓட்டுரிமை எப்படி வந்தது? எப்படி எல்லாம் கஷ்டப்பட்டதால் வந்தது?  எத்தனை தியாகங்களுக்குப் பிறகு வந்தது? இந்தத்    தலைமுறைக்கு சரியாகத் தெரிந்தபாடில்லை. அரசுகளோ கல்விச் சாலைகளோ உரிய முறையில் தெரிவிப்பதி்ல்லை. இப்படியே போய்கிட்டு இருந்தா ஒவ்வொரு மனத்தையும் வெள்ளக்காரப் பிசாசு மறுபடியும்  பிடித்துவிடுமே!

"வெண்ணிலா! இப்போ நான் சீரியசா எழுதிகிட்டு இருக்கேன். கொஞ்சம் தொந்தரவு பண்ணாதேம்மா. இதை எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். நானே சொல்றேன், என்ன?" நான் சொல்லி முடிப்பதற்குள் 10 15 புடவைகள் நறுமணம் பரப்பியவாறே வீட்டுக்குள் நுழைந்தேவிட்டன. ஆடவர் கூட்டம் வாசலில் காவலுக்குக் காத்திருப்பது போல் நின்று கொண்டிருந்தது. 
 
"சார்! காசு வந்துருக்குது, துணிமணி வந்துருக்குது, இதெல்லாம் வாங்கினு எங்கக் கட்சிக்கு ஓட்டு போடணும். இன்னா சார் அப்டி பாக்குறீங்க? காசுன்னா கசக்குதா உங்களுக்கு? நீங்க காசு வாங்குவிங்களோ மாட்டிங்களோ எங்களுக்குத் தெரியாது. எப்புடியும் எங்களுக்குத்தான் ஓட்டு போட்டாகணும்.  நல்ல முடிவுக்கு வாங்க. நாளைக்கு வந்து பாக்கறோம்".

சூராவளி வந்த வேகத்தில் திரும்பிவிட்டது. என் மனைவி வாயடைத்துப் போய் இன்னும் அப்படியே நின்று கொண்டுதான் இருந்தாள். "வெண்ணிலா! ஏன் நிக்கிற? சமையல கவனியேம்மா. எந்தக் கட்சி வந்தாலும் நாமதான் வருமானம் தேடிக்கணும். நாமதான் சமைச்சு சாப்படணும். ஆத்தோட போற செட்டியார் ஆதாயமில்லாமெ போவாறா? அப்படித்தான் இந்த கட்சிக்காரவங்க கூட. அதையெல்லாம் பாத்தா ஆவுமா? போ போ!"

சொன்னது சொல்லிவிட்டேனே ஒழிய பத்திரகாளியாகிவிடுவாளோ என்ற பயம் எனக்கு இல்லாமல் இல்லை. அவளைச் சற்று உற்று நோக்கிறேன். வேடிக்கைதான். வெண்ணிலா முகத்தில் தண் நிலா. என்ன நினைத்தாளோ என்னவோ சமையற்கட்டுக்கு போனவள் ஒரு கப் டீயோடு திரும்பி வந்தாள். அதை மேஜையில் வைத்துவிட்டு "நல்ல முடிவா எடுங்க." என்று கொஞ்சலாகக் கூறிவிட்டு மறுபடியும் மறைந்தேவிட்டாள்.

"என்ன முடிவெடுத்தீங்க?" மதியம் சாப்பாட்டைப் பரிமாறிக்கொண்டே கேட்டாள் வெண்ணிலா. அடுத்த வீட்டு ஆம்பிள்ளைகளின் திறமைகளைப் பற்றி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போனாள். என் முட்டாள்தனத்தையும் விட்டுவைக்கவில்லை. நான் நினச்சிருந்தா கோடீஸ்வரனாகி இருக்கலாமாம். எல்லாத்தையும் கோட்டைவிட்டுவிட்டு கடுதாசிகளே கதி என்று கிடக்கிறேனாம்.  இப்படியே பல கு்ற்றச்சாட்டுகள். அவள் வாயிலிருந்து நெ்ருப்புப் பொறிகள் பறந்து வந்து என்னைப் பதம் பார்த்துக் கொண்டே இருந்தன. ஆயினும் நான் வாயே திறக்கவில்லை. நல்ல பிள்ளை மாதிரி உட்கார்ந்திருந்தேன். முழு கவனத்தையும் சாப்பாட்டு ருசியில் வைத்துவிட்டேன்.  எந்த சமயத்தில் எது சொன்னாலும் கணவன்மார்கள் எப்படியாவது தப்பித்துக் கொண்டுவிடுவார்கள். சாப்பாட்டு சமயத்தில் எப்படி வைதாலும் எங்கும் போக முடியாதில்லையா? அதனால்தான் இல்லத்தரசிகள் கணவர்களை தண்டிப்பதற்கு சாப்பாட்டறையையும் படுக்கையறையையும் தேர்ந்தெடுப்பார்களோ என்னவோ! ஞாயம் என் பக்கம் இருந்தாலும்  மனைவி கோவக்கனல் வீசும்போது எதிர்வாதத்தில் இறங்காதிருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று சும்மா இருந்துவிடுவேன். எப்போதாவது நேரம் வாய்க்கும் போது;  அவள் சாந்தமாக இருக்கும் போது அதை மறுபடியும் விளக்குவேன். கணவன் மனைவி சண்டை வரும் போது யாராவது சும்மா இருந்துவிட்டால் கலகக்கனல் தானாகவே தணிந்துவிடும் என்பதில் நம்பிக்கை உடையவன் நான்.

பிற்பகல் 2 மணி ஆங்கிலச் செய்தியறிக்கையைக் கேட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவது எனக்குப் பழக்கம். அன்று என்னவோ சற்று அதிகமாகவே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது. எழுந்து குளியலறைக்குச் சென்று முகத்தை அலம்பிக் கொண்டு வந்தேனோ இல்லையோ டீ கப்பும் கையுமாக வெண்ணிலா நின்று கொண்டிருந்தாள். இது எது டா பெரிய வம்பாப் போச்சே! என்று நினைத்தவாறே டீக்கப்பை மட்டுமன்றி அதைக் கொண்டு வந்தவளையும்  சற்று நெருக்கமாகவே என் பக்கத்தில்  இழுத்துக் கொண்டேன். பொய்க் கோவமோ நாணமோ தெரியவில்லை, போங்கள் என்று தன்னை விடுவித்துக்கொண்டு விலகினாள் அவள். "வெண்ணிலா! உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது. இப்போ விட்டா இந்த வாய்ப்பு எப்ப கிடைக்குமோ என்னவோ. நம்ம கல்யாணமா்ன புதுசுல நம்ம 2 பேரும் எப்படி எல்லாம் இருந்தோம்? அப்பல்லாம் நீ என்னவிட்டு இருப்பதே இல்ல.  சிற்றுண்டி, தேனீர், சாப்பாடு எது  சாப்பிட்டாலும் 2 பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம். எது செஞ்சாலும் ஒருத்தரை ஒருத்தர் கமெண்ட் அடிச்சிகிட்டு... ஒரே சிரிப்பு போ. பார்த்தவங்க  பொறாமைப்படும்படி நம்ம ஜோடி இருந்தது. இப்ப என்னடான்னா, அவ்வப்போது வெண்ணிலாவ மறச்சு வெச்சிட்டு பத்ரகாளிய இரவல் வாங்கினிருக்க. போ போ நீ கூட  ஒரு டீ எட்த்தாந்துக்கோ. சாப்ட்டுகினே பேசலாம்". என்ன நினைத்தாளோ என்னவோ  முகத்தில் குங்குமம் படற சிரித்துக்கொண்டே ஓடினாள்.
வெண்ணிலா டீக்கப்போடு வந்தாள் சோஃபாவில் எனக்கு நெருக்கமாக அமர்ந்தாள். டீ பருகிய வண்ணமே என் விரல்கள் அவள் கூந்தலை கோதிக் கொடுத்தன. கன்னங்களை உரசி உறவாடின. அவள் ஒன்றும் பேசவில்லை. டீ முடிந்துவிட்டது. வெண்ணிலா இளமை ஞாபகங்களில் இருந்திருக்க வேண்டும். அந்த மயக்கம் கலைவதற்குள்ளாகவே சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட வேண்டும். அவள் முற்றிலும் என் பிடிக்குள் வந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் ஆ்ரம்பித்தேன்.

"வெண்ணிலா கண்ணு, நீ படிச்ச பத்தாவது அறிவுக்குப் பத்தாது. அதுனாலத்தான் எல்லாரு மாதிரி நீ கூட தைதை என்னு குதிச்சிட்டு இருக்க. அநேகமா நா சொல்லப்போறதெல்லாம் உன் மனசுக்கு எட்டி இருக்காது. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நம் தமிழ் நாட்ல சுப்ரமணிய பாரதினு ஒருத்தர் இருந்தாரு. அவுரு ரொம்ப தேச பக்தர். விடுதலைப் பாட்டு எழுதினாரு. இளைஞர்கள்ல  விடுதலை நெருப்பு மூட்டினாரு. வெள்ளக்காரங்க அவரை ஊர் ஊரா தொரத்துனாங்க. அவுரு சாப்பாட்டுக்குக் கூட இல்லாம கஷ்டப்பட்டு இருக்காரு. சுப்ரமணிய சிவா, கொதிச்செழுந்தாரு. அவரையும் ஜெயில்ல போட்டாங்க. தொழு நோய் தொத்திகிச்சு. கடைசியில கஷ்டப்பட்டு உயிர் விட்டாரு. சிதம்பரனார் என்ன சின்ன ஆ்சாமியா? ஜெயில்ல செக்கிழுத்தாரு. எத்தனையோ பொம்பிளைங்க நக நட்டெல்லாம் குடுத்தாங்க. பல பேருக்கு ஆஸ்தி எல்லாம் கூட போச்சு. இப்படி எல்லாம் அவங்க எதுக்கு செஞ்சாங்க? வருங்கால சந்ததிங்க நல்லா இருக்கனுதானே? ஏழை பணக்காரன் என்னு இல்லாமல் திறமைசாலிகள் புத்திசாலிகள் ஆட்சிப்பொறுப்புக்கு வரனுனுதானே? அப்படி வந்தாதான் நம்ப முன்னோர் கண்ட கனவுகள் நினைவாக முடியுமில்லியா? இப்புடி காசு குடுக்கறவங்களுக்கெல்லாம் ஓட்டு போட்டு இலவசங்களுக்கெல்லாம் ஏங்கிகிட்டு காலம் கடத்தினா நாடு உருப்படுமா? நீயே சொல்லு. சைனாவிலே வளம் கொழிக்கும் பெரிய ராஜ்யங்கள் 5 இருக்கு. அவற்றுக்கு சமமா நாமிருக்க வேண்டாமா? ஒரு காலத்திலே உலகமெல்லாம் இந்தியாவைப் பார்த்துதான் கத்துகிச்சு. இப்ப என்னடான்னா, அது நம்மளப் பாத்து கத்தும்படியா நாம செய்யலாமா? நீயே ஒரு நிமிசம் சிந்தி. உனக்கே புரிஞ்சு போயிடும்.

நான் சொல்லி முடிப்பதற்கும் வெளியே கதவு தட்டுவதற்கும் சரியாக இருந்தது. வெண்ணிலா போய்தான் கதவு திறந்தாள்.  உள்ளே ஒரு கும்பல் நுழைந்தது. "அடெடே! நம்ம இளங்கோ சார்தான் இவுரு. இவுர எனக்கு ரொம்ப நாளா தெரியுமே. நம்மாள்தான்டா இவுரு. அடுத்தவுங்குளுக்கு ஓட்டு போடுவாரா என்ன? அப்புடிதானே சார்? கும்பலில் இருந்து ஒருத்தர் கூவிய வண்ணம் பேசினார். நீண்ட நாள் பழக்கம் உடையவர் போல் அவர் தோரணை இருந்தது. அவரை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தேன். சற்று வியப்பாகவும் கூட இருந்தது. ஏனென்றால் நான் அவரை ஒரு முறை கூட பார்த்த ஞாபகமில்லை. இதற்குள் அடுத்தவன் தொடர்ந்தான். சார், உங்களப்போல பெரியவங்களுக்கு குடுக்கறதுக்கு பெரிய தொக எங்களிடம் இல்ல சார். அடையாளமா இத வெச்சுக்கங்க. நம்ம ஆட்சி வந்தா உங்களுக்கு இல்லாததென்ன?  சார். என் பேச்ச நம்புங்க" என்றவாறே சில நோட்டுக்களை என்னிடம் நீட்டினான். நான் செய்வதறியாது அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கும்பலிலிருந்து மற்றொரு குரல் ஆவேசமாகத் திறந்தது. "எதுக்குடா இவரப்போய் கெஞ்சி கேட்டிங்கிறீங்க? மயிலே மயிலே இறகு போடுன்னா போடுமாடா? நாளைக்கு காலைல வரலாம் வாங்க. தலைவர் நல்லா யோசிச்சுக்கட்டும். அப்பவும் அவுரு சரிப்பட்டு வர்லேன்னா காலோ கையோ எடுத்துட்டா தானா வழிக்கு வருவாரு" என்று சொல்லி முடிப்பதற்குள்  "யோவ் புத்தி கெட்டவனே! வந்த எடத்தில இப்புடி பேசினா ஓட்டு வருமா? அதுக்கு பதிலா வேட்டுதான் வரும்" என்று மற்றொருவன் அவனை அதட்டினான். அவர்களுக்குள்ளவே சண்டை மூண்டது. வந்த நேரம் சரியில்லை என்று அனைவரும் வெளியேறினர்.

வெண்ணிலா கண்களிர் நீர் ததும்பியது. கொஞ்ச நேரம் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது. "ஏங்க, இதெல்லாம் நமக்கு தேவைதானா? எவனோ ஒருத்தனுக்கு போட்டிகினு போய்ட வேண்டியதுத்தானே. ஜனநாயகம்ன்றாங்க? பண பலமும் ஆள் பலமும் காட்டி மிரட்டி  எப்புடியாவது வசப்படுத்தணும்னு நினைக்கிறாங்க. என்ன கூத்துங்க இது? சொன்னபடி செய்யாம போனா மெரட்ரதா? நமக்குக்கூட மானமும் ரோஷமும் இல்லியா? இந்த கைதைங்க யாருக்குமே ஓட்டு போடக்கூடாதுங்க. என்ன சொல்றீங்க? அவள் மனதில் உருவெடுத்த உறுதி முகத்தில் மட்டும் ப்ரதிபலிக்காமல் வாயிலிருந்தும் வழிந்தோடியது. அசந்தே போய்விட்டேன். இவள்தானா அந்த வெண்ணிலா? இப்பத்தான் என் வெண்ணிலா. தன்  சொற்படிதான்  கண்டிப்பாக நடக்கனுனு  எந்த அறிவுள்ள கணவனும் எண்ண மாட்டான். தான் சொல்வதை முழுவதும் கேட்க வேண்டும். அதைப்பற்றி சிந்தித்தாராய வேண்டும். நல்லதானால் கொள்ள வேண்டும். மற்றதைத் தள்ள வேண்டும் என்றுதான் நல்ல கணவன் நினைப்பான். பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி, யாரும் கெட்டவர்கள் இல்லை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. சிலருக்குக் கற்பூர புத்தி, சிலருக்குக் கரி புத்தி மற்றும் பலருக்கோ வாழைத்தண்டு புத்தி. நாம்தான் போராடி அவர்களை ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். நாளைக்கு 2 கட்சிக்காரங்களும் வருவாங்க. இவங்கள சமாளிப்பது எப்படி? எவ்வளவு மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டாலும் வழி தோன்றவில்லை.

மறுநாள் காலை உதயசூரியன் வானத்தை நோக்கி எழும்பிவிட்டான். அவன் கதிர்கள் எங்கள் வீட்டு வெளிப்பக்கத்திலிருந்த செடியிலுள்ள  இரட்டை இலையை  மெல்லத்தொட்டு முத்தமிட்டன. அந்த இரட்டிலை மட்டுமன்றி அதில் தற்காலிகமாகக் குடியேறிய பனித்துளியும் மின்னியது. எங்கும் பொன்னிறம் பூத்துக் குலுங்கியது. இந்த இயற்கை அழகை ரசிக்கும் பார்வையை தொலைத்துவிட்ட தொண்டர்கள்  விர்விர் என்று வீட்டை நோக்கி வந்தனர். இவர்களை முந்திக் கொள்ள வேண்டுமென்று அடுத்தக் கட்சி கும்பலும் வந்தது. ஒருவரை ஒருவர் இடைமறித்து "இளங்கோ சார் எங்களுக்குத்தான்..." என்று இரு கோஷ்டிகளும் சண்டை போடத் தொடங்கின. வாய்ப்பேச்சு முற்றி கைகலப்பு வரையில் வந்துவிட்டது. இதற்குள் ஒரு குரல் பலமாகக் கேட்டது. "யோவ் எதுக்குயா சண்ட போட்டுக்கிறீங்க? அந்தாள் நம்மை எல்லாம் ஏமாத்திட்டு எங்கயோ தலமறைவாய்ட்டாரு. வாசல்ல பெரிய பூட்டு தொங்குதே! அது கூட பாக்கல நீங்க. என்ன மனுசங்கையா" குரல் வந்த திக்கை நோக்கி அத்தனைக் கண்களும் திரும்பின. வாய்க்கு வந்தபடி எல்லாரும் என்னைத் திட்டிவிட்டு போய்ச் சேர்ந்தனர். குரல் கொடுத்த பக்கத்து வீட்டு ஆசாமி நான் திரும்பி வந்த பிறகு கதைக்கதையாய்ச் சொன்னார். 2 பேரும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டோம். வெண்ணிலா கூட எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.

*********
ஜெ. முனிரத்தினம்.

2 comments:

  1. கதை நல்லாருக்கு சார்.

    திரும்பி வந்தப்புறம் அந்தக் கூட்டம் வரலையோ?!! இல்ல தேர்தலே முடிஞ்சுருச்சா...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  2. "பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி, யாரும் கெட்டவர்கள் இல்லை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. சிலருக்குக் கற்பூர புத்தி, சிலருக்குக் கரி புத்தி மற்றும் பலருக்கோ வாழைத்தண்டு புத்தி. நாம்தான் போராடி அவர்களை ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்." சிரப்பாந கருத்து ஐய்யா.

    ReplyDelete