Sunday, June 23, 2019

துர்கா மாதா - எனது பார்வையில்.



நோக்கும் போக்கும்

புது சிந்தனை புகட்டி புத்துணர்ச்சி புத்துணர்வு ஆகியவற்றை  புகுத்தி மனிதன் மனிதனாக மலர்வதற்கு வழி வகுக்கும் மகோன்னத இலக்கிய வடிவம் புதினம். மேகம், கடல் நீரில் இருந்து உருவாகிறது. உயரே கிளம்பி வானத்தில் வட்டமிட்டு கடலிலும் மற்ற நில பரப்பிலும் மழை பொழிந்து பயன்படுகிறது. அவ்வாறே புதினம் கூட சமூகத்தில் இருந்து உருவாகி சமூகத்திற்கே பயன் அளிக்கிறது. மனித இயல்பும் மனித வாழ்வும் தன்னகத்தே கொண்டுள்ளதால் மனித மனங்களையும் சில சமயங்களில் இதயங்களையும் தொடுகிறது. எனவே புதினத்திற்கு வாசகர்கள் இடையே  மிகுந்த வரவேற்பு.


கல்கி, சாண்டில்யன் போன்றோர் வரலாற்றை  படம் பிடித்து காட்டினர். வரலாற்று போக்கை புரிந்து கொண்டு அதில் இருந்து நன்மை பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் போலும். அகிலன், நா. பார்த்த சாரதி, ராஜவேலு போன்றோர் சுதந்திர போராட்டத்தை சித்தரித்து வாசகர்கள் மனங்களில்  தேச பக்தி விதைத்தனர். அவ்வாறே  சமூக சிந்தனை உள்ள பலரும் சமூகத்தில் அவ்வப்போது தலைத்தூக்கும் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும்  சீர்கேடுகளையும்  சித்தரித்து சீர்திருத்ததிற்கு வழிவகுத்தனர்.

இத்தகைய சமூக பார்வை கொண்ட  எழுத்தாளர்களில்  சகோதரி ஜீவா  சிறந்த இடத்தை பிடித்து துர்கா மாதா என்னும் புதினத்தை சிறப்புற படைத்திருக்கிறார். மனங்களை கவர்ந்து சிந்திக்கச் செய்யும் ஆற்றல் படைத்த சில புதினங்களில் துர்கா மாதாவுக்கும் சிறப்பிடம் இருக்கிறது என்பதில் மிகை இருக்க முடியாது. வாட்டி வதைக்கும் இக்கால பிரச்சனைகளை தன்னகத்தை கொண்டு தீர்வை நோக்கி புதினம் நடை போடுகிறது. பிரச்சனைகளை நன்கு புரிய வைத்து தீர்வுகளை திணிக்காமல்  திறம்பட சிந்திக்க செய்ய  இந்த புதினம் முயல்கிறது. எழுத்தாளர் சிந்தித்தவாறே வாசகரும் சிந்திப்பாரேயானால் எழுத்தாளர் எடுக்கும் செய்தியினை ஏற்பது மட்டுமன்றி கடைபிடிக்க இயல்பாயாயின் அதுதான் ஒரு படைப்பின் வெற்றி என்று அழுத்தம் திருத்தமாக அருதியிட்டு கூறலாம். இந்த வகையில் பார்க்கும்போது வெற்றி புதினம் என்றே துர்கா மாதாவை சொல்ல வேண்டி இருக்கிறது.

துர்கா மாதா புதினத்தை  எழுதிய சகோதரி ஜீவா இலக்கிய துறையை சார்ந்தவர் அல்ல. முழுக்க முழுக்க விஞ்ஞான துறையை சார்ந்தவர். மாணவர்களுக்கு மைக்ரோபயாலஜி பயிற்றுவிப்பவர். அத்தகைய ஆசிரியரும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு  சிறப்புற  செயல்பட்டிருப்பது சிந்தனைக்குரியது; பாராட்டிற்குரியது.

அண்மையில் பெண் எழுத்தாளர்கள் தங்களது நற்பார்வையை  வீட்டோடு மட்டும்  நிறுத்திக் கொள்ளாமல் வெளி உலகத்திற்கும்  பரப்புகிறார்கள். சமூகத்தில்  ஊறிக் கிடக்கும்  அவலங்களையும்; அநீதிகளையும் கண்டு  கொதித்தெழுகிறார்கள். மிகவும் பலம் பொருந்திய தங்கள்  பேனா முனைகளை கொண்டு  அவற்றை தகர்த்தெரிய  ஓயாமல் போராடுகிறார்கள். அத்தகைய வீர பெண் எழுத்தாளர்களில்  ஜீவாவும்  ஜீவித்திருக்கிறார். இவருக்கு நமது மனம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.

எழுத்தாளர் ஜீவாவும் அவரது நண்பரும் ஒரு சிற்றுண்டி சாலையில் வேலை செய்யும்  பெண் மனியை பார்த்தனர். அவரை  ஒரு புரட்சிகாரியாக உருவகப்படுத்திக் கொண்டனர். அவர்தான் துர்கா. அப்படி தொடங்கிய துர்காவின் பயணம்  புதினம் முழுவதும்  இடைவிடாமல் தொடர்கிறது. துர்காவின் செல்வாக்கு மற்ற பாத்திரங்கள் மீதும் பலமாக படர்ந்திருக்கிறது. பார்த்து, கவனித்து அனுசரிக்க வேண்டிய  பாத்திரமாகவே  துர்கா  இந்த புதினத்தில்  படைக்க பட்டிருக்கிறாள்.

துர்கா பாத்திரத்தை முதன்மையாக கொண்டு படைக்கப்பட்ட இப்புதினத்திற்கு துர்கா மாதா என்ற பெயர்  மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. புதினத்தின் இறுதி பகுதியில் துர்காவை துர்காமாதா என்றழைப்பதில் உள்ள ஞாயத்தை ஒரு பாத்திரத்தால் எடுத்தியம்பினார் ஆசிரியை.

துர்கா மாதா புதினத்தில் இடம் பெற்றிருக்கும் பிரச்சனைகள் முற்றிலும்  இக்காலத்திற்கும் பொருந்துபவை. அன்றாடம் செய்தித் தாள்களிலும்  டீவி நியூஸ் சேனல்களிலும்  பெண்கள் மேல் நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் பளிச்சிடுகின்றன. அவற்றை அனைவரும் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள் ஆனால்  உரிய முறையில் சிந்திப்பது கிடையாது. எனவே வாசகர்கள் சிந்தனை அவற்றின் பால் ஈர்ப்பதற்கு  இந்த புதினம் முயல்கிறது.

வளர்ச்சி குன்றீய  வட மாநிலங்களில் இருந்து  தமிழ்நாடு போன்ற  வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு   பஞ்சம் பிழைக்க  பலர்  புலம்பெயர்கிறார்கள். அங்கிருந்து இங்கு வரும் அவர்கள்  மொழி பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளை  சந்திக்க நேர்கிறது. சந்தேகத்திற்கு ஆளாகிறார்கள். எங்கு எத்தகைய கொடுமை நடந்தாலும் அது அவர்களுடைய  செயலாகத்தான் இருக்க வேண்டும் என்று மக்கள்  குருட்டுத்தனமாகவே  முடிவு செய்கிறார்கள். விளைவாக பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு நேரும் தொல்லைகளுக்கு  எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அவல நிலை எழுத்தாளரின்  இதயத்தை பிழிந்திருக்க வேண்டும். அத்தகைய வருத்தத்தில் இருந்து உதித்ததுதான்  இந்த புதினம்.

வசந்தாவின் இரவு நேர வேலை, அவளது குழந்தையின் பாலியல் வன்கொடுமையும் அதை தொடர்ந்த கொலையுமாய் புதினத்தில் திரையை விலக்குகிறது. இந்த நிகழ்ச்சி அதிகபடி என்றுதான் தோன்றுகிறது. இதை தவிர்த்திருந்தாலும் பாதகம் இல்லை. மகாலெச்சுமியின் ஆறு வயது குழந்தையை வன்புணர்ந்து  கொலைசெய்வதில் இருந்துதான் உண்மை புதினம் ஆரம்பம் ஆகிறது.

போலிஸ் கெடுபுடி மக்களை சந்தேகத்தின் பேரில்  கைது செய்து சிறையில் போடுவது, தேவைக்கு அதிகமாக  தண்டனை கொடுப்பது, குற்றத்தை நிருபிக்க அங்கும் இங்கும் பறந்து படாத பாடுபடுவது  மிக நன்றாக  சித்தரிக்கப்பட்டுள்ளன.

லெட்சியத்தோடு வெளியே வந்த துர்கா அந்த லெட்சியத்திற்காகவே தன்னை ஒரு ஏழை தொழிலாளியாக மாற்றிக்கொள்வதும் அதனால் விளையும் கொடுமைகளை  பொறுமையுடனே ஏற்றுக் கொள்வதும்  போற்றற்குரியது.

நம் சமூகத்தின் அவலங்கள் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் போக்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை பற்றி நீண்ட  விவாதங்கள்  இடம் பெற்றிருக்கின்றன. அவையும் பல முறை இடம் பெற்றிருக்கின்றன. அவ்வாரில்லாமல்  சுருக்கமாகவும் உருக்கமாகவும்   இதயத்திற்கு நெருக்கமாகவும்  சொல்லி இருக்க முடியும்.

சில நிகழ்ச்சிகள் ஒரு எழுத்து கூட பிசகாமல் இரண்டு மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பது சாமான்ய வாசகர்களுக்கு குழப்பமாகவும்  மற்றும் பல வாசகர்களுக்கு  சலிப்பு தட்டும் வகையிலும்  இருக்கலாம். எனவே  அவற்றை  பற்றி எழுத்தாளர் ஒருமுறைக்கிருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவரது மொழி அருமை. குறைக் கூற  எப்படி முயன்றாலும் முடியாதென்றே சொல்லலாம்.

இந்த புதினத்தை படித்த ஆண் வாசகர்கள் பெண்களை பாலியல் கொடுமைப்படுத்த கூடாதென்று  உறுதி மேற்கொள்ள நினைக்க தோன்றுகிறது. இதுவே இந்த புதினத்தின் வெற்றி என்று சற்றும் சளைக்காமல் கூறலாம்.

சகோதரி ஜீவா அவர்கள் மேன்மேலும் இத்தகைய புதினங்களை படைக்கவேண்டும். அவற்றை அவரே ஒருமுறைக்கு இருமுறை ஒரு திறனாய்வாளராக படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்  புதினத்தின் தரம்  வரவர  உயர்ந்துவிடும்.

மறுபடியும் சகோதரி ஜீவாவுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் பாராட்டையும்  வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

---

ஜெ. முனிரத்தினம்.

No comments:

Post a Comment